சீட்டாட்டம் -சிறுகதை - யோ.கர்ணன்.






சந்தியில் பஸ்சால இறங்கேக்க எனக்கு மெல்லிய டிம், மாஸ்ரருக்கு முழு டிம். எங்களை இறக்கிப் போட்டுப் போன இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்சைப் பாத்து இரண்டு கையையும் விரிச்சபடி நடுறோட்டில நின்று “என்னயிருந்தாலும் மகிந்த ஒரு நரியன்தான். இஞ்ச விட்டான் துரும்பை... அங்க அடிச்சான் கம்மாரிஸ்...” என்று உரத்த குரலில் சொன்னார். போன சனம் நின்று புதினம் பாக்கினம். அதால வந்த இரண்டு ஆமிக்காரரும் சிரிச்சுக் கொண்டு நின்று பார்க்கினம். அவயளுக்கு தமிழ் தெரியாட்டிலும், ஒரு அங்கிள் வெறியில் நின்று புசத்திறார் என்று நினைச்சிருப்பினம். எனக்கு பெரிய அந்தரமாய் போயிற்றுது. மாஸ்ரரின்ட கையைப் பிடிச்சு இழுத்து “பேசாமல் வாங்கோ மாஸ்ரர்'' என்று மெல்ல உறுக்கினன். மாஸ்ரர் பயப்பிடுறாரில்லை. “டேய்... ஏன் பயப்பிடுகிறாய்... நினைக்கிறதைக் கதை... பயப்பிடாதை சொல்லு... என்ன பிரச்சினை....”

“மாஸ்ரர் சனம் பார்க்குது... தேவையில்லாத கதையை விட்டிட்டு வாங்கோ...”

“எது தேவையில்லாத கதை... ஓ .... மகிந்தவோ.... அடி செருப்பால...” என்றபடி என்ர பிடியிலிருந்த தனது கையை உதறி எடுத்து, கையை உயர்த்தி “மகிந்த ராசபக்ச வாழ்க... கம்மாரிசடிச்ச சிங்களவன் வாழ்க...” என்று விட்டு காறித் துப்பினார்.

எனக்குப் பெரிய அந்தரமாய்ப் போயிற்றுது. பேசாமல் தொட்டியடி றோட்டால நடக்கத் தொடங்கினன். எங்கட காணிக்குப் போற பாதை அதுதான். மாஸ்ரர் கூப்பிட்டார். நான் நிக்கயில்லை. கெஞ்சினார். நான் நிக்கயில்லை. ஓட்டமும் நடையுமாக ஏதோ கதைச்சுக் கொண்டு பின்னால வாறார். முந்தின காலமென்டால் மாஸ்ரர் இப்பிடி கோசம் போட்டதுக்கு விசுவமடுச் சந்தியில ஐஞ்சு வெடி விழுந்திருக்கும்.

சந்தியிலிருந்து ஐம்பது மீற்றர்ல இயக்கத்தின்ர அரசியல் துறையிருந்தது. அதில கடைசியாக சீராளன், போர்ப்பிரியன் ஆக்கள் பொறுப்பாக இருந்தவை. முதல் வெடியை அரசியல்துறை வைச்சிருக்கும். 

அரசியல்துறை கழிஞ்சு போக, புலனாய்வுத்துறைக்காரர் இருந்தவை.

அதுதான் திருமலை மாஸ்ரரின்ட மெயின். ஏரியாவில நடக்கிற நல்லது கெட்டது, மங்கலம் - அமங்கலம், உருட்டுப் பிரட்டு, அடி வெடி எல்லாமே அங்கதான் நடந்தது. இரண்டாவது வெடி இவையள் வைச்சிருப்பினம்.

இவைக்கு முன் ஒழுங்கையில் காவல்துறைக்காரரும், மாலதி படையணி பெட்டையளும் இருந்தினம். மூன்றாவது வெடியை சந்தேகமில்லாமல் காவல்துறை வைச்சிருக்கும். நாலாவது வெடிதான் மிச்சமாயிருக்குது. என்னயிருந்தாலும் அவையள் பொம்பிள்ளையள் தானே. அவையள் இப்படி வெடி வைச்சு நான் இதுவரைக் கண்டதில்லை. ஐஞ்சாவது வெடிதான் ரிக்ஸ்சான வெடி. கொஞ்சநாளைக்கு முதல் நீங்கள் பேப்பருகளில படிச்சிருப்பியள், மோட்டார் சைக்கிளில வந்து சுட்டவை, காரில் வந்து சுட்டவை, கூரை பிரிச்சு சுட்டவை, மதிலேறிக் குதிச்சு சுட்டவை, தின்னேக்க சுட்டவை, குடிக்கேக்க சுட்டவை என்று. ஆர் சுட்டது, எப்படிச் சுட்டதென்பது வெடி வைச்ச ஆளுக்கும் வெடி வேண்டின ஆளுக்கும் தான் தெரியும்.

இது மாதிரித்தான் ரவுணுக்குள்ள ஐஞ்சாறு பேர் நிப்பினம். நல்லா இயக்கத்தோட ஊறிய ஆக்களுக்கும், சாப்பாட்டுக் கடைக்காரருக்கும் மட்டும் இவையளைத் தெரியும். அனேகமாக எல்லாரும் சாப்பாட்டுக் கடைக்காரரோட நல்ல பழக்கம் வைச்சிருப்பினம். ரவுணுக்குள்ள நடக்கிற அசுமாத்தங்களை கவனிச்சுக் கொண்டிருப்பினம். இவையளும் ஒரு வெடி வைச்சிருப்பினம்.

எங்கட அப்பா இருக்கிறாரே அந்தாள் ஒன்றுக்கும் உருப்படாத ஆள். அந்தாளால உருப்பட்ட தென்டால் நாலைஞ்சு கள்ளுத் தவறணை முதலாளியள்தான். அந்தாள் தன்ர வாழ்க்கையில செய்த ஒரேயொரு உருப்படியான காரியமென்டால், படிச்ச வாலிபர் திட்டமொன்று அந்த நேரம் விசுவமடுக் காட்டை பிரிச்சுக் குடுக்கேக்க, ஒரு துண்டு காணி வாங்கினதுதான். அப்ப கிளநொச்சியே பெரிய காடெண்டு சொல்லி கனபேர் வரவில்லையாம். விசுவமடுக்கு வந்த முதல் பஸ்சில அப்பரும் வந்திறங்கியிருக்கிறார். கனபேர் தாக்குப் பிடிக்க ஏலாமல் திரும்ப ஓடியிட்டினம். அப்பர் நின்றார். அந்த நேரம் அப்பரின்ட ‘கோழையாவாக’ சிவம் அண்ணை இருந்திருக்கிறார். ஆள் தோட்டக்காட்டான். உலகத்திலேயே தோட்டக்காட்டான் மாதிரி நன்றியுள்ளவன் இல்லையென்டு அப்பா வெறியில் புசத்துவார். பிறகு அப்பா யாழ்ப்பாணத்திலயிருக்கேக்க சிவமண்ணைதான் காணியைப் பார்த்தார்.

அப்பான்ட குடிவெறி எனக்குப் பிடிக்கயில்லை. கொஞ்சநாளாக இரண்டு பேரும் முழுக்கிக் கொண்டு திரிஞ்சம். ஏமஞ் சாமத்தில வந்து புசத்திற வேலையை நிப்பாட்டச் சொல்லச் சொல்லியும், அம்மாட்டச் சொல்லியிருந்தேன். அண்டைக்கும் ஆளை கனநேரமாகக் காணவில்லை. நான் கேற்றைப் பூட்டியிட்டன். அப்பா கேற்றுக்கு வெளியில நின்று படு தூசணத்தால கத்துகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தன், சரிவரவில்லை. கேற்றைத் திறந்துபோட்டு, அப்பா உள்ளுக்கு வர, விட்டன் மூஞ்சையைப் பொத்தி ஒண்டு. மனுசன் மூச்சுப் பேச்சில்லாமல் நிலத்தில.

இதுக்குப் பிறகு அப்பர் வலு திருத்தம். ஆனால் நான் வீட்டிலயில்லை. நான் இயக்கத்துக்குப் போனன். எனக்கு இடம் வலம் தெரியேலையோ என்ர காலமோ தெரியாது. நான் போனது இயக்கத்தின்ர கலை பண்பாட்டுக் கழகத்துக்கு. இதுக்கு முதல் புதுவை இரத்தினதுரை என்டொரு பேரையே நான் கேள்விப்பட்டதில்லை. துப்பாக்கி தூக்கி சமராடுவதை விடவும் சிரமமான பணி மக்களை அணிதிரட்டுவது. கலைகளின் ஊடாக அவற்றை செய்வதே எமது நோக்கம் என கலை பண்பாட்டுக்கழகம் போட்ட நாடகமொண்டில் நடிக்க அனுப்பினார் புதுவை அண்ணா.

எனக்கு கிடைச்சது ஆமி வேசம். ஐஞ்சு பேரில ஓராளாக வந்தன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு என பல பகுதிகளில் நாடகம் நடந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆக்களும் இப்பிடித்தான், ஸ்ராட்டில் சின்னச்சின்ன வேசங்களில் நாடகம் நடிச்சுத்தான் பேமசானவை என்று அதில நடிக்கிற எல்லோருமே கதைப்பினம். கொஞ்சநாள் போக மெல்ல மெல்ல நானும் இப்பிடி கதைக்கத் துவங்கினன்.

அப்பதான் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்து தென்மராட்சி மட்டும் சனம் ஓடி வந்து நின்று யோசிக்குது. கிளாலிக் கடல் கடக்கிறதோ, திரும்பிப் போறதோ எண்டு. வீட்டுக் காரரையெல்லாம் திருப்பி அனுப்பிப் போட்டு, அன்ரி ஆக்களோட நான் கடல் கடந்து வன்னி போனன். 

அன்ரியின்ர மூத்தமகன் அப்பவே இயக்கத்தில பெரும்புள்ளி. இரண்டு பொடி காட்டோடதான் வீட்டுக்கு வருவான். அதால அன்ரி வன்னிக்குப் போக வேண்டியிருந்தது. அவவுக்கும் வன்னி தெரியாது. அப்பரின்ட காணியை தடவிப் பிடிச்சு விசுவமடுவில குடியேறினம். அந்த நேரம் இடப்பெயர்வு சம்பவங்களை வைச்சு குருத்தோலை அழுவதேன், வெள்ளைப் புறா சிவப்பானதேன், யாழ் தேவி என்றது மாதிரியான பேமசான நிறைய நாடகங்களை பலதரப்பும் போட்டினம். சும்மா சொல்லக்கூடாது. நாங்களும் வலுதிறமான நாடகங்கள் சிலது போட்டம். அவையளோட சேர்ந்து தொடர்ந்து நாடகம் நடிக்கிறன். இடம்பெயரேக்கையும் சேர்ந்து வந்திட்டன் என்டது மாதிரியான காரணங்களாலோ அல்லது என்ர திறமையாலயோ தெரியாது எனக்கும் புரமோசன் கிடைச்சது. ஆமிக் கூட்டத்தில வந்த ஆள் இப்ப தனிப் பாத்திரம் ஏற்கத் தொடங்கிற்றன். இப்பவும் சிவாஜி, எம்.ஜி.ஆரின்ட கதைதான் என்ர மனசுக்குள்ள ஓடிக் கொண்டிருக்குது.

ஒருநாள் இப்பிடித்தான், செவ்வானம் சிவந்ததேன்’ என்றொரு நாடகம் பழகிக் கொண்டிருக்கிறம். எனக்கும் ஒரு முக்கியப் பாத்திரம் தந்திருக்கினம். அப்ப அன்ரியிட்டயிருந்து ஒரு அவசர மெசேஜ் வருது “எங்கயிருந்தாலும் உடனே வா. அவசரம்”. நானும் விழுந்தடிச்சுப் போறன். வீடு பேயறைஞ்சு போய்க் கிடக்குது. அன்ரி சொன்னா, “உன்ர தங்கச்சி... உவள் தான் சுமி. அவளுக்கு ஆம்பிளை கேட்டிருக்குது. ஆரோடையோ ஓடிற்றாள்....”

சுமி அன்ரியின்ர இரண்டாவது பெட்டை. எனக்கென்டால் விசர் எழும்பிற்றுது. இந்த தோறை பார்த்த வேலையால தெருவில தலைநிமிந்தே நடக்கேலாமல் போகப் போகுது. ஆர் பொடியன் என்று பாத்தால், சந்தியில சலூன் வைச்சிருக்கிறவனிண்ட பொடியன். கடைசியில் எங்கட குடும்பத்துக்குள்ள ஒரு அம்பட்ட மாப்பிள்ளையும் வந்திட்டான்.

நான் நேரே காவல்துறைக்குப் போனேன். நான் ஆர், என்ன செய்யிறன், இன்ன இன்னாரைத் தெரியும் என்டதுகளை விளங்கப்படுத்திப் போட்டு, சுமியின்ர பிரச்னையைச் சொன்னேன். படிச்சுக் கொண்டிருந்த பெட்டையைக் கொண்டு போயிருக்கிறான். இன்ன இன்ன செக்சன்களில் இது குற்றம். இன்ன இன்ன அக்சன் எடுக்கலாமென்டு நாலைஞ்சு பிளானும் குடுத்தன். அதில் ஒன்று, சந்தியில கடை வைச்சிருக்கிற தகப்பன்காரனைப் பிடித்து அடைக்கலாம்- மகன் சரணடையுற வரை. காவல்துறைப் பெரியவனும் வலு இன்ரஸ்டிங்காக என்ர பிரச்சினையை கேட்டிட்டு, “இப்பிடித்தானண்ணை நல்ல குடும்பங்களை சில பொம்பிளையள் தலைகுனிய வைக்கிறாளுகள். எதுக்கும் நீங்கள் ஒரு என்ட்ரி எழுதித் தந்திட்டுப் போங்கோ... நான் கவனிக்கிறன்...” என்றான். நானும் ஒரு என்ட்ரி எழுதிக் குடுத்திட்டு வந்தன்.

கொஞ்ச நாளில் ஓட்டமெற்றிக்காக இந்தப் பிரச்சினை மறைஞ்சிட்டுது. காவல்துறையும் ஒரு அக்சனும் எடுக்கவில்லை. மல்லாவியில ஒருநாள் நாங்கள் நாடகம் போட்டம். கூட்டத்துக்குள்ளயிருந்து கைக்குழந்தையொட ஒரு பெட்டை எழும்பி 'அண்ணை' என்று கூப்பிடுது. ஆர் என்னைக் கூப்பிடுறது என்டு யோசிச்சுக் கொண்டு திரும்பினன். சுமி. அதுவரை அவளைப் பற்றி வேசை, தோறை என்டது மாதிரியான கொமன்ட்ஸ் அடிச்சுக் கொண்டு திரிந்தாலும், அந்த ரைமில எல்லாம் மறந்து போச்சுது. அந்தக் குடும்பத்தில என்னை மட்டும்தான் அண்ணனாக நினைக்கிறன் என்றும் சொன்னாள்.

அன்றிரவு வீட்டுக்கு போய் அன்ரியோட கதைச்சன். என்னயிருந்தாலும் அவள் உங்கட மகள்தானே. எப்பிடியாவது உங்களோட சேருங்கோ என்டன். அன்ரிக்கு விளங்குகின்றது. “ஏன் அவளை எங்கயாவது கண்டனியோ...” என்றா. நான் ஓமென்டன். அன்ரி ஒரு வெடிச் சிரிப்பு சிரிச்சுப் போட்டு “துரும்பு அடிச்சுப் பாத்திருக்கிறாள்...” என்டா.

அன்ரி பொம்பிளைதான். ஆனால் நல்லா சீட்டடிப்பா. அவ ஆம்பிளையளோட இருந்து சீட்டடிக்கிறதை கண்டிருக்கிறன். நான் திறமையான விளையாட்டுக்காரனென்டில்லை.

சிலருக்கு சீட்டென்றால் உயிர். காலையில் இருந்து பின்னேரம் மட்டும் இருப்பினம். அவையளிட்ட ஏதேனும் அலுவலாகப் போறவைக்கும், பிரச்சினைதான். எழும்ப விடமாட்டினம். என்னயிருந்தாலும் உந்த மன்னார்ப் பக்கத்து கடற்றொழிலாளியள் இதில ராசாக்கள்தான். இப்பிடியான கொஞ்சப் பேரை பார்த்துமிருக்கிறன். என்ன மந்திரமோ, மாயமோ தெரியாது. ஆர் ஆர் என்னதான் வைச்சிருக்கினமென்டதை பிசகில்லாமல் சொல்லுவினம். இப்ப பாருங்கோ, இதில ஓராளிட்ட ஸ்கோப்பன் ராசாவும், பெட்டையும் வருதென்டு வையுங்கோவன். அந்தாள் என்ன செய்யுது, அதில கம்மாரிஸ் குத்திது. இதென்னடா இந்தாளுக்கு பைத்தியமா பிடிச்சிட்டுதென்டு யோசிப்பியள். அப்ப அந்தாள் ஒரு விளையாட்டுக் காட்டும். துரும்பில சின்னத் தாளை இழுத்துவிடும். அப்படியே தாள் விழுந்து கொண்டு போக இவரின்ட பாட்னர் அடிப்பான். வீத்தை வீறு, மணல் எல்லாம் அவன்தான் வைச்சிருப்பான். இப்ப அவன் விளையாட்டை கையில எடுப்பான். இதுக்கு அடுத்தடுத்த அடியில வெட்டிக் கம்மாரிசென்டோ, எங்கட ஆள் கம்மாரிஸ் அடிக்கும். கம்மாரிசில ஒரு குருவி பிழை பிடிக்க ஏலாது. இப்ப நீங்கள் அந்தாளிட்டக் கேப்பியள்... “எப்பிடியண்ணை இது....”

அந்தாள் முகம் கொள்ளாத ஒரு சிரிப்போட சொல்லுவார். “ம்...ம்... அது தான் விளையாட்டு... துரும்பை சரியான ரைமில அடிச்சு, அடிச்சன் பார் கம்மாரிஸ்...” சுமி துரும்பை இழுத்து கம்மாரிஸ் அடிச்சாளோ இழுக்காமல் கம்மாரிஸ் அடிச்சாளோ தெரியாது. கொஞ்ச நாளில் இரண்டு பக்கமும் வலு நெருக்கம். தாயும் மகளும் ஒரே வீட்டில்தான் இருந்தினம். எங்கட விசுவமடுக் காணியிலதான் இருக்கினம். முந்தின காலத்தில கடிதம் போட்டாலே அந்த இராச்சியத்துக்கு பத்து நாளைக்குப் பிறகுதான் போகும். இப்ப எல்லா இடமும் ரெலிபோன் வந்திட்டுது. அவளும் இரண்டு நாளைக்கொரு கோல் அடிச்சு “அண்ணா... என்னை மறந்திட்டியோ... என்னை பாக்க வரமாட்டியோ” என்கிறாள்.

சரி போனால் போகுது என்று மாஸ்ரரையும் கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன். மாஸ்ரரும் முந்தி என்னோட நாடகம் நடிச்ச ஆள்தான். வவுனியாவில் இருந்து வெளிக்கிடேக்க இரண்டு பேரும் வலு நோமல். பிறகு கிளிநொச்சி ரவுணிலதான் கொஞ்சம் குடிச்சம். அதுவும் மாஸ்ரரின்ட ஆய்க்கினையாலதான் நான் குடிச்சன். நான் எதிலயும் வலு நிதானம். மாஸ்ரர் ஒரு பரதேசி நாய். கேற்றைத் திறந்து உள்ளடேக்க, மாஸ்ரர் தவண்டு வந்த மாதிரியுமிருக்குது. வேலியைப் பிடித்துக் கொண்டு வந்த மாதிரியுமிருக்குது. நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. 

வீட்டுக்குள்ள இருக்கேக்க மாஸ்ரர் பம்மிக் கொண்டு இருக்கிறார். எனக்கு ஆளைப் பார்க்க சிரிப்பாக இருக்குது. அந்த நேரம் மாஸ்ரருக்கு ஒரு கோல் வருது. கதைச்சார். கதைச்சு முடிச்சுப் போட்டு சொன்னார். “ஒரு குருவி வாலாட்டேலாமல் இருந்த ஏரியாவுக்க புகுந்ததுமில்லாமல்... டிஸ்கோ டான்சும் ஆடினானாம் என்ட கணக்கா... சீ.ரி.பி பஸ்சில வந்திறங்கி இஞ்சயிருந்து போன் கதைக்கிறம்” என்டார்.

பிறகு, “துரும்படிச்சுக் கம்மாரிஸ் அடிச்ச இடமடா இது” என்றார். எனக்கு ஏறிற்றுது. “மாஸ்ரர் வெறி முறியாட்டில் போய் குளிச்சிட்டு படுங்கோ...” என்றேன். மாஸ்ரர் சொன்னார் “எடேய்.. சீட்டில ஒரு ரிக்ஸ் இருக்கடா, இப்ப உன்னிட்ட துரும்பில்லையெண்டு வை. உன்ர கூட்டாளியிட்ட இருக்கலாம். மெல்ல ஒரு துரும்பை இறக்க வேணும்."

நான் எழும்பினன். மாஸ்ரருக்கு விளங்கீற்றுது வாயை மூடிவிட்டார். இண்டைக்கு இஞ்ச மாஸ்ரரின்ட மூஞ்சையைப் பொத்திப் போடுவன். அவ்வளவு கோபம். எப்பப் பார்த்தாலும் துரும்பும் கம்மாரிசுமெண்டு கொண்டு. கூட்டிக்கொண்டு வந்திட்டு அடிக்கிறது பாவம் எண்டு நான் உள்ளுக்க போனன். தங்கச்சியோட கொஞ்சநேரம் ஊர்க் கதையள் கதைச்சுப் போட்டு குளிச்சன். குளிச்சிட்டு வர ஒரு பிளேன் ரீ தந்தாள். வெளியில இருக்கிற மாஸ்ரருக்கு குடுத்தாச்சுதோ என்று கேட்டன். மூத்த மகன் கொண்டு போயிற்றான் என்றாள். பிளேன் ரீயை குடிச்சிட்டு வெளியில போனன். பிளேன் ரீ கொண்டு போன பொடியனை வைச்சு கதைச்சுக் கொண்டிருந்தார். 

“தம்பி... துரும்படிச்சு கம்மாரிஸ் அடிச்சான் மகிந்த... இஞ்ச துரும்படிச்சான்... அங்க முள்ளி வாய்க்காலில கம்மாரிஸ் அடிச்சான்”. பொடியன் வெருண்டு போய் நிக்கிறான். எனக்கு ஏறிட்டுது. “என்ர மாஸ்ரர் திரும்பத் திரும்ப புசத்திறியள்... என்ன பிரச்சினையென்டதை சொல்லுங்கோ..”

மாஸ்ரர் ஒரு நிமிசம் வடிவாச் சிரிச்சார். அப்பிடியெ அலகைப் பொத்திப் போட வேணும் மாதிரிக் கிடக்குது. பிறகு சொன்னார். “எடேய் ஜனாதிபதி-எலெக்சன் நேரம் இஞ்ச வைச்சுத் தான்ரா மகிந்த, இயக்கத்துக்கு இருபது கோடி காசு கொடுத்தவன். தனக்கு போடச் சொல்லி” என்றார்.

நன்றி: புது விசை 

நன்றி: http://yokarnan.blogspot.fr/2011/02/blog-post_26.html

Comments